காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம் 

73

காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்

தயாரிப்பு – அறம் எண்டர்டெயின்மெண்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ்

இயக்கம் – ராகவ் மிர்தாத்

இசை – ஹரி எஸ் ஆர்

நடிப்பு – கௌஷிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி, மேத்திவ் வர்கீஸ், லொள்ளுசபா சாமிநாதன், RJ விக்னேஷிகாந்த்

நேரம் – 2 மணி நேரம்

ரேட்டிங் – 3/5

கதைக்களம்,

அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.

அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இளைஞர்களை கவரும் விதமாக படத்தை நல்லா கலர்ஃபுல் ஆகவும் இளமை ததும்பும் படியும் இயக்கி உள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் என்பது தெளிவாகவே தெரிகிறது. படத்தில் ஏகப்பட்ட இடங்களில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளன ராகம் படத்தின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஒரு இடத்தில் மெளனராகம் படத்தில் கார்த்தி பேசிய வசனத்தையே அழகாக வைத்திருப்பது இயக்குநரின் திறமை என்று தான் சொல்ல வேண்டும்.

இது எனது முதல் படம் என்று கௌசிக் ராம் தானே முன் வந்து கூறினால் தான் தெரியும். அந்தளவிற்கு யதார்த்தமாக நடித்திருக்கிறார். அசத்தல் அறிமுக நாயகனுக்கு சிகப்பு கம்பள வரவேற்புகள்.

அஞ்சலி நாயர் படத்திற்கு படம் தனது திறமையை நிரூபித்து வருகிறார். RJ விக்னேஷின் அளவான நடிப்பும், அழுத்தமான வசனமும் படத்திற்கு பலம்.