2008-ம் ஆண்டு. ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் தீவிரமடைந்திருக்கும் சூழல். மனைவியை போரில் பறிகொடுத்த அமர் ராமச்சந்திரன், தனது மகளையும் இழந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில், அவளை தமிழகத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக தமிழகத்தை வந்தடையும் அவருக்கு, எதிர்பார்த்தபடி உறவினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. மகளுடன் சாலையோர வாழ்க்கைக்கு தள்ளப்படும் அவருக்கு, சில நல்ல உள்ளங்கள் நம்பிக்கைக்கரம் நீட்டுகின்றன.
மகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை உருவாகும் நேரத்தில், அவர் அஞ்சிய துயரம் வேறு வடிவில் வந்து நிற்கிறது. அதன் பின்னணியில் ஒரு தந்தையின் வேதனையையும், போரால் சிதைக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது ‘தாய்நிலம்’.

அமர் ராமச்சந்திரன், முகபாவனை கண்களின் வழியாகவும் கதாபாத்திரத்தின் வலியை கடத்துகிறார். மகளாக நடித்த நேஹா அமர், அச்சமும் கலந்த ஏக்கமும் பார்வையால் மனதில் நிற்கிறார். பாலா சிங் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள், அகதிகளாக வருபவர்களுக்கும் மனிதாபிமானம் இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றன.
மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர் என படத்தில் வரும் பலரும், மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.

பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு வலியை அழகாக பதிவு செய்திருக்கிறது,அவுசேப்பச்சனின் இசை உணர்வு மிகுந்த காட்சிகளுடன் பயணிக்கிறது. டீஜோ பி. வர்க்கீஸின் படத்தொகுப்பு படத்தின் உணர்வை ஆழமாக மனதில் பதியச் செய்கிறது.
இனப்படுகொலையையும் ஈழப் போரையும், மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், ஆதரவின்றி நிற்கும் குழந்தைகளின் மனநிலையை எப்படி ஒரு வலி மிகுந்ததாக இருக்கும் என்று இந்தத் திரைப்படம் சொல்கிறது, உலகின் பல பகுதிகளில் போரால் அனாதையாகும் குழந்தைகள் குறித்து பார்வையாளர்களிடம் கேள்வியை எழுப்புகிறது? இந்த திரைப்படம்
எழுதி இயக்கிய அபிலாஷ் ஜி.தேவன், போர், அகதி வாழ்க்கை, இழப்பு ஆகியவற்றை ஒரு தந்தை–மகள் உறவின் வழியாக சொல்லியிருப்பது படத்தின் பலம்.
மொத்தத்தில், ‘தாய்நிலம்’ – போர் முடிந்தாலும், அதன் வலி குழந்தைகளின் வாழ்க்கையில் தொடர்கிறது என்பதை உணர்த்தும் தவிப்பு.