“Hope” Movie Review – “ஹோப்” திரைவிமர்சனம்

பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட கொரியன் சினிமாவின் பாணியில், மர்மம், ஆக்‌ஷன், திகில் எனப் பல அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் ‘ஹோப்’ திரைப்படம் ரசிகர்களைக் எந்த அளவுக்குக் கவர்கிறது என்பதைப் பார்ப்போம்.

கொரியாவின் அமைதியான கிராமம் ஒன்றில் அடுத்தடுத்து நிகழும் மர்மமான விபத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதன் பின்னணியை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை அதிகாரி, முதலில் ஒரு ராட்சதப் புலிதான் இந்தச் சம்பவங்களுக்குக் காரணம் என நினைக்கிறார். ஆனால், அவர் எதிர்கொள்ளும் ஆபத்து புலி அல்ல; மனித உருவம் கொண்ட மர்ம மான்ஸ்டர் என்பது தெரியவருகிறது. அந்த உயிரினத்தைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கும் அவர், எதிர்பாராத பல அதிர்ச்சிகளையும் ஆபத்துகளையும் சந்திக்கிறார். அங்கு ஒன்றல்ல, பல மான்ஸ்டர்கள் இருப்பது தெரியவர, கதை அடுத்த கட்டப் பரபரப்பை நோக்கி நகர்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் நாயகனின் இயல்பான நடிப்பும், பதற்றத்தைத் தக்கவைக்கும் திரைக்கதையும்தான். வழக்கமான ஹீரோ பாணியில் எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்தாமல், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக நாயகன் வெளிப்படுத்தும் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. நாயகியின் துணிச்சலும், இருவரும் இணைந்து மான்ஸ்டரைத் துரத்தும் காட்சிகளும் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

மான்ஸ்டரை முழுமையாகக் காட்டாமல், அதன் இருப்பை உணர்த்தி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கும் இயக்குநரின் உத்தி பாராட்டுக்குரியது. கார் துரத்தல் காட்சி உள்ளிட்ட அதிரடி தருணங்கள் இருக்கையின் நுனியில் அமர வைக்கின்றன. இரண்டாம் பாதியில் மான்ஸ்டர்களின் பின்னணி குறித்த மர்மங்கள் ஒவ்வொன்றாக அவிழ்வதும் சுவாரஸ்யம் சேர்க்கிறது.

படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் மர்மச் சூழலுக்கு வலு சேர்க்கின்றன. சிஜி காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில், ‘ஹோப்’மர்மம், மான்ஸ்டர் வேட்டை, அதிரடி என ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் திரைப்படம். திகில் மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை விரும்புபவர்கள் திரை விருந்து.

ஹோப் – மர்ம மான்ஸ்டருடன் மிரட்டும் கொரியன் த்ரில்லர்

Comments (0)
Add Comment