Va Varalam Va Movie Review – வா வரலாம் வா திரைவிமர்சனம்

149

சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுவதும் அதற்காக சிறை தண்டனை அனுபவித்து திரும்புவதும் என வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் படத்தின் கதாநாயகன் பாலாஜி முருகதாஸும் அவரது நண்பன் ரெடின் கிங்ஸ்லியும். ஒருகட்டத்தில் மனம் திருந்தி உழைத்துப் பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து வேலை தேடுகிறார்கள். சரிவர வேலை கிடைக்காமல் போகிறது. அவர்கள் அடிக்கடி சிறைக்குப் போய்வருகிறவர்கள் என்ற விவரம் தெரியவருவதால் அந்த வேலை பறிபோகிறது.

அப்படியான சூழலில் குற்றச் செயல்களில் ஊறிப்போய் துப்பாக்கி அதுஇதுவென கெத்தாக வலம்வருகிற ‘தோட்டா’ ராஜேந்திரன் என்ற ரவுடிப் பேர்வழியை அணுகுகிறார்கள். அவன் அவர்களிடம் பெரிதாய் எதையாவது திருடிக் கொண்டு வாருங்கள் அதன் மூலம் பணம் பார்க்கலாம் என ஐடியா கொடுக்கிறார். அவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். அதன்பலனாக அதி சொகுசான பல லட்சம் மதிப்புள்ள ஏசி பேருந்து ஒன்றை கடத்த திட்டமிடுகிறார்கள்.

அவர்கள் எதிர்பாராத விதமாக, பள்ளியில் படிக்கிற சிறுவர் சிறுமிகள் 40 பேரையும் பணக்கார இளம்பெண்கள் இருவரையும் சேர்த்துக் கடத்துகிற வாய்ப்பு தானாக அமைகிறது. அதை பயன்படுத்தி பேருந்தை கடத்தி ஒரு காட்டுப் பங்களாவுக்கு போய்ச் சேர்கிறார்கள். இனி தோட்டா ராஜேந்திரன் தயவு தேவையில்லை என்றும் கடத்தியவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் புரட்டலாம் என்றும் முடிவெடுக்கிறார்கள்.

கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு போலீஸ் தேடல் வேட்டையில் இறங்க, இன்னொரு பக்கம் தோட்டா ராஜேந்திரன் அவர்களைத் தேடித்திரிய அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் தொடர்ச்சி…

கதாநாயகனாக, சிறுவயதில் தன் குடும்பம் சந்தித்த வறுமையால் பெற்றோரை இழந்து திருடனாக மாறிப்போனவனாக ‘பிக்பாஸ்’ பாலாஜி முருகதாஸ். அவருக்கு இது அறிமுகப் படம். கடத்தியவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்றாலும், கடத்தி வந்தவர்களை அக்கறையாக பார்த்துக் கொள்ளும்போது மனிதாபிமானமுள்ள கெட்டவனாக இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

கடத்திய இரு பெண்களில் ஒருவரான மஹானா சஞ்சீவ் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்தவர்) மனதில் இடம்பிடித்து பாடல் காட்சியில் ரசிக்கும்படி ஆடுகிறார். கதையம்சமுள்ள படங்களில் நடித்தால் வருங்காலத்தில் மக்கள் மனதிலும் இடம்பிடிக்கலாம்.

படத்தின் இரண்டாம் ஹீரோவாக, கதாநாயகனுக்கு நண்பனாக ரெடின் கிங்ஸ்லி. கண்களை அகலமாய் விரித்துப் பார்த்தபடி வசனங்களை இழுத்து இழுத்துப் பேசுகிற அவரது வழக்கமான ஸ்டைலில் மாற்றமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடத்தப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி ரெமாவை காதலிக்கிறேன் என்ற பெயரில் செய்கிற ரகளை கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.

பாலாஜி முருகதாஸுக்கு பொருத்தமான ஜோடியாக மகானா சஞ்சீவ். அவரது பளபள தோற்றமும் பளீர் சிரிப்பும் கவர்கிறது. பாடல் காட்சியில் உடலின் இளமையை தாராளாமாய் காட்டியிருக்கிறார்.

பெரும்பாலும் பரிதாபப் பிறவியாய் அழுதுவடிகிற கதாபாத்திரங்களிலேயே பார்த்துப் பழகிய காயத்ரி ரெமாவை இந்த படத்தில் கலகலப்பாக பார்க்க முடிகிறது.

தோட்டா ராஜேந்திரனாக மைம் கோபி. ரவுடி தொழிலில் ஈடுபடுகிற கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்,சிங்கம்புலி தீபா சங்கர் ஜோடி காமெடி என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன.

ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார் வையாபுரி. பயில்வான் ரங்கநாதன், வாசு விக்ரம், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், ரஞ்சன், போராளி’ திலீபன் என படத்தில் நிறைய நடிகர்கள். அவரவர் பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையில் ‘உன்னைத்தானே உன்னைத்தானே’ டூயட் பாடலின் மெல்லிசை மனதுக்கு இதம் தருகிறது. குழந்தைகளுக்கு கதை சொல்லும் பாணியில் அமைந்த ‘சொல்லப் போறேன் சொல்லப் போறேன்’ பாடலில் சிறுவர் சிறுமிகளின் ஆட்டம் உற்சாகம் தருகிறது.

தேர்ந்தெடுத்து, கமர்சியல் அம்சங்களைக் கலந்து முழுநீள பொழுதுபோக்குப் படைப்பாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆருடன் இணைந்து எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ளார்.