சீதா ராமம் விமர்சனம் – பான் இந்தியா காதல் காவியம்

31

ஓர் இனிமையான காதல் கதையை,ராணுவப் பின்னணியில் சுகமாக செதுக்கியுள்ளார் இயக்குநர் ஹனு ராகவபுடி. அதற்கு ஆழமாக உதவுகிறது, ஆச்சரியமான திருப்பங்கள் கொண்ட அவரது திரைக்கதை.

மிகச்சிறந்த ரொமான்டிக் லவ் ஸ்டோரியை கொடுத்துள்ளார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. ஆல் டைம் ஃபேவரிட் காதல் படங்கள் என லிஸ்ட் போட்டால் அதில் இடம் பிடிக்கும் திரைப்படங்களுக்குள் ஒரு படமாக இப்படம் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவு மனதை உருக வைக்கும் லவ் ஸ்டோரியை அழகான கவிதை போல் கொடுத்து பார்ப்பவர்கள் மனதை வருடி இருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. வசனமும் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் ரசிக்கத்தக்க வகையில் கச்சிதமாக அமைந்துள்ளன. முக்கிய காரணமாக பார்க்கப்படுவது படத்தின் மேக்கிங். இதற்காக ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கலை இயக்குநரும் ஒருசேர போட்டிருக்கும் உழைப்பு படத்தை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதேபோல் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதை, வசனத்தையும் அழகாக அமைத்து கதைக்குள் இருக்கும் பிரம்மாண்டத்தையும் அழகாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.

சல்மான் ராணுவ அதிகாரியாக நடித்ததை காட்டிலும் லவ்வர் பாயாக நடித்திருக்கும் நடிப்பில் செஞ்சுரி அடித்துள்ளார். காதல் வந்த இளைஞரின் உணர்ச்சிகளை தன் முகபாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி ராம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிக்க வைத்துள்ளார். மிகவும் கடினமான காட்சிகளில் கூட இவரின் அசால்ட்டான நடிப்பு யதார்த்தமாக அமைந்து நடிப்பதே தெரியாத அளவிற்கு அழகாக அமைந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய பலமே நாயகி மிருணால் தாக்கூர் தான்.

ராஷ்மிகா மந்தானா துடுக்கான பெண்ணாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் கோபப்படும் இடங்களில் சரியான அளவில் கோபப்பட்டும், இறக்கப்படும் இடங்களில் சரியான அளவில் இறக்கப்பட்டும், நெகிழ்ச்சி அடையும் இடங்களில் சரியான அளவில் நெகிழ்ச்சியாக நடித்தும் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார்.

கேங்ஸ்டர் படங்கள் என பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் பான் இந்தியா படங்களின் வரிசையில் பிரம்மாண்ட காதல் காவியமாக வெளியாகியிருக்கும் சீதாராமம் திரைப்படம் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது. படத்தின் பாடல்களும், படத்தின் நீளமும் படத்திற்கு சற்று மைனசாக பார்க்கப்பட்டாலும் காட்சிகளுக்குள்ளும், கதைக்குள்ளும், காதலுக்குள்ளும் இருந்த பிரம்மாண்டத்தை அழகாக  செய்துள்ளது இந்த சீதாராமம் திரைப்படம்.