“Sathyavan Savithiri″ – Movie Review – “சத்தியவான் சாவித்திரி” திரைவிமர்சனம்

18

கணவரின் உயிரைக் காப்பாற்ற எமனிடமே வாதாடி வெற்றி பெற்ற சாவித்திரியின் புராணக் கதையை, இன்றைய காலத்திற்கேற்ப நீதிமன்றப் பின்னணியில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராகச் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’.

வழக்கறிஞராகப் பணியாற்றும் சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்), தனது குருவான பிரபல வழக்கறிஞர் மிஷ்கினையே நீதிமன்றத்தில் எதிர்த்து வெற்றி பெறுகிறார். இதனால் புகழ்பெறும் அவர், எதிர்பாராத உடல்நலப் பாதிப்பால் கருச்சிதைவைச் சந்தித்து வழக்கறிஞர் பணியிலிருந்து விலகுகிறார். இந்த நிலையில், ஷில்பா மஞ்சுநாத் கொலை வழக்கில் அவரது கணவர் சாருகேஷ் கைது செய்யப்பட, கணவரை நிரபராதி என நிரூபிக்க மீண்டும் வழக்கறிஞராகக் களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக, பழிவாங்கும் நோக்கத்துடன் மிஷ்கின் அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடுகிறார். இந்த சட்டப் போராட்டத்தில் சாவித்திரி வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று முதல் பாதியிலேயே கணிக்க வைக்கும் திரைக்கதை, ஆனால், உங்கள் கணிப்பை தாண்டி இயக்குனர் கையாண்டிருக்கும் கதைக்களம் எதிர்பாராத ஒன்று, இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, பல திருப்பத்துடன் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் பிரவீன் எஸ். விஜய், படத்தின் மீதான பார்வையை மாற்றிவிடுகிறார். குறிப்பாக, கொலை வழக்கின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை வெளிப்படுத்தும் விதமும், கிளைமாக்ஸ் திருப்பமும் படத்திற்குப் பெரிய பலம்.

சாவித்திரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், கணவரைக் காப்பாற்றப் போராடும் மனைவியின் தவிப்பையும், நீதிமன்றத்தில் உறுதியுடன் வாதாடும் வழக்கறிஞரின் துணிச்சலையும் தனது இயல்பான நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக மிஷ்கின் தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் முதிர்ச்சியான நடிப்பால் நீதிமன்றக் காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்க்கிறார். சாருகேஷும் இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பாலசரவணன் சில நிமிடங்கள் வந்தாலுமே காமெடியில் கவனம் இருக்கிறார்.

அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு நீதிமன்றக் காட்சிகளின் இறுக்கத்தையும், கதையின் த்ரில்லர் உணர்வையும் சிறப்பாகக் கடத்துகிறது. சாம் சி.எஸ். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது, பிரசன்னா ஜி.கே.வின் படத்தொகுப்பு இரண்டாம் பாதியின் திருப்பங்களைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தி படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பு, இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு, எதிர்பாராத கிளைமாக்ஸ் திருப்பம். வழக்கமான நீதிமன்றக் கதையாகத் தொடங்கி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருமாறும் ‘சத்தியவான் சாவித்திரி’, முதல் பாதியில் இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இரண்டாம் பாதியில் பல திருப்பங்களால் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

மொத்தத்தில், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சுவாரஸ்யம் கூட்டும் இந்த சத்தியவான் சாவித்திரி திரையரங்குக்கு சென்று ரசிக்கலாம்!

சத்தியவான் சாவித்திரி – முதல் பாதியில் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் எதிர்பாராத சுவாரஸ்யம்!