வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் பெங்களூரில் விற்பனையாளர்களாக பணியில் சேர்ந்து, நண்பர்களாகி, தங்கள் பணியில் சந்திக்கும் சிரமங்களை நகைச்சுவையுடன் கடந்து செல்கிறார்கள். எதிர்பாராத வகையில் ஒரு தொழிலதிபரின் மகன் கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிக் கொள்ளும் அவர்கள், தங்களது விற்பனைப் பணி மற்றும் பயிற்சியை பயன்படுத்தி உண்மையை கண்டுபிடித்து தப்பிக்க முயல்வதே படத்தின் மையக்கதை.

விற்பனையாளர்களின் வாழ்க்கையை வெறும் தொழிலாக மட்டும் காட்டாமல், அவர்களது அன்றாட அனுபவங்கள், நட்பு மற்றும் சந்திக்கும் சிக்கல்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை. சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நால்வரும் கதைக்கு தேவையான கலகலப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகிகளும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

சரவணனின் ஒளிப்பதிவு, பிரணவ் கிரிதரனின் இசை, சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு ஆகியவை படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கின்றன. சிறிய பட்ஜெட்டிலும் ஒரு நிறைவான கமர்ஷியல் படத்தை கொடுக்க இயக்குநர் முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

சில இடங்களில் கதை இன்னும் விறுவிறுப்பாகவும், திரைக்கதை சற்றே இறுக்கமாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றால் நட்பு, நகைச்சுவை மற்றும் கிரைம் கலந்த ஒரு எளிமையான பொழுதுபோக்கு அனுபவத்தை ‘கோல்ட் கால்’ வழங்குகிறது.

‘கோல்ட் கால்’ – கூல் கமர்ஷியல் பயணம்